பணத்தகராறில் ராணுவ வீரரின் மனைவி அடித்துக்கொலை


பணத்தகராறில் ராணுவ வீரரின் மனைவி அடித்துக்கொலை
x

வில்லுக்குறி அருகே பணத்தகராறில் ராணுவ வீரரின் மனைவி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

வில்லுக்குறி அருகே பணத்தகராறில் ராணுவ வீரரின் மனைவி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

ராணுவ வீரர் மனைவி

வில்லுக்குறி அருகே உள்ள மணக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை (வயது 68). இவரது மகன் அய்யப்பன் கோபு, ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு துர்க்கா (38) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

ராணுவ வீரரான அய்யப்பன் கோபு கடந்த மாதம் திடீரென இறந்தார். இதையடுத்து துர்க்கா கணவரின் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

பணத் தகராறு

ராணுவ வீரரான அய்யப்பன்கோபு இறந்ததையடுத்து அவரது குடும்பத்திற்கு பணபலன்கள் கிடைத்ததாக தெரிகிறது. இந்த பணத்தை பங்குபோடுவது தொடர்பாகவும், சொத்து பிரச்சினை தொடர்பாகவும் துர்க்காவுக்கும் அவரது மாமானார் ஆறுமுகம் பிள்ளைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று மதியம் இந்த பிரச்சினை தொடர்பாக அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரமடைந்த ஆறுமுகம்பிள்ளை அவரது மகன் மது (43) ஆகிேயார் துர்க்காவை கட்டையாலும், கம்பாலும் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த துர்க்கா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து அலறி துடித்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துர்க்கா பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாமனார் ஆறுமுகம்பிள்ளை, கொழுந்தன் மது ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணத் தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story