9 ஏக்கரில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு
9 ஏக்கரில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கினை அசோகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி-நாரணாபுரம் ரோட்டில் சிவகாசி சிவன் கோவிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அசோகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி கோவில் அதிகாரி சத்யசீலன், மாநகராட்சி சுகாதார அதிகாரி சித்திக், பஞ்சாயத்து தலைவர்கள் ராஜபாண்டியன் (பள்ளப்பட்டி) தேவராஜன் (நாரணாபுரம்), ஒன்றிய கவுன்சிலர் ஜி.பி.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது சிவன்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இனி குப்பைகளை கொட்ட அனுமதிக்க கூடாது. இந்த இடத்தை சுத்தப்படுத்தி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கள், பெண்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து பள்ளப்பட்டி, நாரணாபுரம், செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி ஆகிய பஞ்சாயத்து பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கீழத்திருத்தங்கல் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் இடத்தில் கொட்டி அந்த பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க வேண்டும் என்று 4 பஞ்சாயத்து தலைவர்களும், எம்.எல்.ஏ. அசோகனிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கீழத்திருத்தங்கல் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை அசோகன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். இந்த இடத்தில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
இதுகுறித்து பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன் கூறுகையில், ரூ.1 கோடி செலவில் கீழத்திருத்தங்கலில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கப்பட்டால் 4 கிராம பஞ்சாயத்துக்கள் பயன்பெறும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என்றார்.