திருப்பத்தூரில் ஒரு வருடத்திற்கு ரூ.4½ கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்


திருப்பத்தூரில் ஒரு வருடத்திற்கு ரூ.4½ கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்
x
திருப்பத்தூர்


திருப்பத்தூரில் ஒரு வருடத்திற்கு ரூ.4½ கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் தெரிவித்தார்.

நகராட்சி கூட்டம்

திருப்பத்தூர் நகராட்சி கூட்டம் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா பேசினார். அப்போது திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு தோராயமாக ரூ.4 கோடியே 61 லட்சத்திற்கான செலவினங்களையும் நகராட்சி பொதுநிதி மற்றும் 15-வது நிதிக்குழுவின் கீழ் வரையறுக்கப்பட்ட தொகை மூலம் மேற்கொள்ளவும் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது.

தற்போது நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 91 பேர் பணியாற்றி வருகிறார்கள். 99 தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடுகளில் இருந்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை அவர்கள் வாங்குவார்கள்.

ஒரு நாளைக்கு பொதுமக்களிடமிருந்து குப்பைகளை பெற ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் தோராயமாக செலவாகிறது என்றார்.

அதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது:-

தனியார்

சுதாகர் (சுயேச்சை):- நகராட்சி பகுதிகளில் தூய்மைப்பணி தனியார் நிறுவனம் அல்லது ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான வாகனங்களையும் ஒப்பந்த முறையில் தர வேண்டும். நகராட்சியில் 4 துப்புரவு ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் கூட இல்லை. அபாய் தெருவில் நாய் கடித்து பள்ளி சிறுமிகள் 2 பேர் காயம் அடைந்துள்ளார்கள். எனவே நாய்களை பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சங்கீதா வெங்கடேஷ் (தலைவர்):- துப்புர ஆய்வாளர்களை நியமிக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஒப்பந்ததாரர் லாரி மூலம் குப்பைகளை அள்ள வேண்டும். நகராட்சி வாகனத்தை அனுப்பினால் அதற்கான வாடகை அவர்கள் தர வேண்டும். நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

டி.டி.சி.சங்கர் (அ.தி.மு.க.):- குப்பை வண்டி பராமரிப்பு செலவு லட்சக்கணக்கில் ஏற்படுகிறது. எனவே ஒப்பந்த முறையில் அவர்களே வாகனங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூர் முதல் ஊத்தங்கரை வரை தேசிய 4 வழி நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டதால், திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை ரோடு வரை இரும்பு கம்பிகள் அமைத்து தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளதால் வாகனங்கள் ஊருக்குள் வளைந்து செல்ல வழி இல்லை.

இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே அவசர தீர்மானம் போட்டு அனைவரும் சேர்ந்து கலெக்டரை சந்திக்கலாம். ரூ.4 கோடியில் திருப்பத்தூர் முழுவதும் தெருவிளக்குகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எப்போது பணிகள் ஆரம்பிக்க உள்ளீர்கள். அவ்வை நகர் பகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை உள்ளது. ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை.

ஆணையாளர்:- தெருவிளக்குகள் அமைக்க பணிகள் தொடங்க உள்ளது. அவ்வை நகர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மது விற்பனை

சரவணன் (ம.தி.மு.க.):- திருப்பத்தூர்- திருவண்ணாமலை மெயின் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பகுதியில் மது பாட்டில்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

லட்சுமி வாசுதேவன் (தி.மு.க.):- 21-வது வார்டு அப்துல் மாலிக் தெருவில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். எனவே உடனடியாக சிமெண்டு பலகைகள் கொண்டு மூடவேண்டும்.

பிரேம்குமார் (தி.மு.க.):- 17-வது வார்டு வீரபத்திரனார் தெரு மற்றும் லட்சுமணத் தெருவில் உள்ள சிறு பாலம் மற்றும் கால்வாய் சந்திப்பு பகுதிகளில் நடைபாதை அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கைகள வைத்தனர்.


Next Story