ரேஷன் பொருட்கள் மழையில் நனையும் பிரச்சினைக்கு தீர்வு:நுகர்பொருள் வாணிப கிடங்கின் மேற்கூரை சீரமைப்பு-பொதுமக்கள் மகிழ்ச்சி
ரேஷன் பொருட்கள் மழையில் நனையும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நுகர்பொருள் வாணிப கிடங்கின் மேற்கூரை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி
ரேஷன் பொருட்கள் மழையில் நனையும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நுகர்பொருள் வாணிப கிடங்கின் மேற்கூரை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நுகர்பொருள் வாணிப கிடங்கு
கோத்தகிரி காந்தி மைதானம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்கு அமைந்துள்ளது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 68 ரேஷன் கடைகளில் பதிவு செய்துள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இந்த உணவு கிடங்கில் பாதுகாக்கப்பட்டு, அங்கிருந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த உணவு கிடங்கு முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது. மேலும் இந்த வளாகம் முழுவதும் ஏராளமான கற்பூரம் மற்றும் பைன் மரங்கள் வளர்ந்து இருந்தன. மழை நேரங்களில் இந்த ராட்சத மரங்கள், உணவு கிடங்கு கட்டிடத்தின் மீது சரிந்து விழுந்து வந்தன. இதனால் சிமெண்டு சீட்டால் ஆன கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதமடைந்ததுடன், மழைநீர் கட்டிடத்திற்குள் வழிந்தோடி அங்கு வைக்கப்பட்டு இருந்த உணவு பொருட்களும் சேதமடைந்து வந்தது.
மரங்கள் வெட்டி அகற்றம்
இதையடுத்து குன்னூர் சப்- கலெக்டரின் உத்தரவின்படி அந்த வளாகத்தில் அபாயகரமாக இருந்த 8 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இருப்பினும் மேற்கூரைகள் பழுதடைந்திருந்த காரணத்தால் கிடங்கினுள் உணவு பொருட்களை பாதுகாத்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்த உணவு கிடங்கின் சிமெண்டு சீட்டால் ஆன மேற்கூரையை அகற்றி அதற்கு பதிலாக தகரத்தாலான சீட் அமைத்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகம் மூலம் கிடங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கட்டிடத்தின் மேற்கூரை 26 மீட்டர் நீளத்திற்கு தகர சீட்களாக மாற்றி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக மீதமுள்ள 30 மீட்டர் நீளத்திற்கு மேற்கூரையை புதுப்பிக்கும் பணி, கிடங்கினுள் பழுதடைந்துள்ள தரைத்தளங்களை பராமரிக்கும் பணி நடைபெற உள்ளது. விரைவில் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் என்றனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.