காழ்ப்புணர்ச்சி, அறியாமையால் சனாதனத்தை பற்றி சிலர் தவறான எண்ணம் கொண்டுள்ளனர் - வடலூரில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
காழ்ப்புணர்ச்சி மற்றும் அறியாமையால் சனாதனத்தை பற்றி சிலர் தவறான எண்ணம் கொண்டுள்ளனர் என்று வடலூரில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
வடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று நடந்த யோகா தின நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதன்பின்னர், வடலூரில் நடந்த வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.
இதற்கு முன்பாக அவர், வள்ளலார் வாழ்ந்த இடமான மருதூருக்கு சென்றார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி வேட்டி, சட்டை அணிந்து தனது மனைவி லெட்சுமி ரவியுடன் வந்தார்.
அங்கு பள்ளி மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கு அவர், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று தமிழில் கூறி வழிபட்டார்.பின்னர் அங்கிருந்து, வள்ளலார் தண்ணீரால் விளக்கெரித்த இடமான கருங்குழிக்கும், அவர் சித்தி பெற்ற இடமான மேட்டுக்குப்பத்துக்கும் சென்றார். மேட்டுக்குப்பத்தில் உள்ள திருஅறையில் தரிசனம் மேற்கொண்ட அவர், சிறிது நேரம் அங்கு தியானம் செய்தார்.
அணையா அடுப்பு
தொடர்ந்து, வடலூரில் உள்ள சத்திய ஞானசபைக்கு சென்று, அங்குள்ள அணையா அடுப்பை பார்வையிட்டார். மேலும் அதில் விறகு ஒன்றையும் எடுத்து அவர் போட்டார். அன்னதான கூடத்தை பார்வையிட்ட பிறகு தர்மசாலையில் தரிசனம் போது கலெக்டர் அருண்தம்புராஜ் உடன் இருந்தார்.
முன்னதாக கவர்னர் வருகையையொட்டி மதியம் 1 மணி முதல் சத்தியஞானசபைக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் நீண்ட நேரமாக அங்கு காத்திருந்தனர். கவர்னர் வந்ததும், அவரை காண பொதுமக்கள் திரண்டனர். அவர்களை பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடி சிறிது தூரம் நடந்து சென்று பின்னர் காரில் ஏறிச்சென்றார்.
வள்ளலாரின் ஜெயந்தி விழா
தொடர்ந்து வடலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி கே.என்.சி. மளிகை மோகனகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடலூர் வள்ளிவிலாஸ் பாலு முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் சாது.ஜானகிராமன் வரவேற்றார்.
விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
தர்மம் செய்ய வேண்டும்
சனாதன தர்மத்தின் மாணவன் நான். வள்ளலார் குறித் புத்தகத்தை நான் படிக்க, படிக்க பிரம்மிப்பு அடைந்தேன். சனாதன தர்மத்தின் 10 ஆயிரம் ஆண்டுகளில் பாரம்பரியத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளல் பெருமான் ஆவார்.
காழ்ப்புணர்ச்சி, அறியாமை போன்ற காரணத்தினால் சிலர் சனாதனத்தை பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளனர். சனாதன தர்மத்தை ரிஷிகள், முனிவர்களின் தத்துவங்கள், உபதேசங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
சனாதனத்தை ஒருவர் வெறுத்தாலும், அவர்களுக்குள்ளும் சனாதனம் இருக்கும் என்பதே சுருக்கமான உபதேசம் ஆகும்.
அனைத்து ஜீவராசிகளும் நோயற்று வாழ வேண்டும் என்பது தான் சனாதனம். அதனால் தான் வள்ளலார், வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறுகிறார். ஒரு பயிர் வாடிப்போனதை எண்ணி அவர் தவிக்கும் தவிப்பு தெரிகிறது. எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் அதற்கு தீர்வு காண்பான் என்று நம்பிக்கை உள்ளது.
ஆன்மிகத்தை பிரித்து விட்டார்கள்
அப்படி 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தமிழ்நாட்டில் காரிருளை நீக்கி ஜோதியாக வந்தவர் தான் வள்ளல் பெருமான். 200 ஆண்டுகளுக்கு முன்பு நாடு அடிமைப்பட்டு கிடந்தது.
நாட்டை சுரண்டி விட்டனர். இந்த நாடு சுரண்டப்பட்டதால், பாரம்பரிய கல்வி, தொழில், விவசாயம், வலிமை என்று அனைத்தும் சீர்குலைந்து போய்விட்டது.
கல்வி, பொருளாதாரத்தை மட்டுமின்றி தனிமனித பெருமையையும் அவர்கள் சீர்குலைத்துவிட்டனர். ஆன்மிகத்தை நமது வரலாறு, இதயத்தில் இருந்து பிரித்து விட்டார்கள். அதேபோல் நமது இலக்கியத்தில் இருந்த ஆன்மிகத்தையும் பிரித்துவிட்டார்கள். எப்படியெல்லாம் சீர்குலைக்க வேண்டுமோ அப்படியெல்லாம் சீர்குலைத்துவிட்டனர். ஆன்மிகம் என்பது சோம்பேறிகளுக்கானது என்ற தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்தி விட்டார்கள்.
புதிதாக வந்த வழிபாடு
நம்மிடையே பல்வேறு வழிபாடு இருந்தாலும் ஒற்றுமையாக இருந்தோம். வெளிநாட்டில் இருந்து புதிதாக வந்த வழிபாட்டினால் தான் நம்மிடையே பிரச்சினைகள் ஏற்பட்டது. அவர்களது வழிபாட்டை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் அவர்கள் நமது வழிபாட்டை பொய்யானது என்று கூறும்போது தான் பிரச்சினை ஏற்படுகிறது. குலதெய்வ வழிபாடு செய்து வந்தோம். அதை வெளிநாட்டு அறிஞர்கள் சிலர் மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் அதை சிதைத்து விட்டனர். நம்முடைய சனாதன தர்மத்தை அழிக்க முற்பட்டபோது, அதை அழிக்க முடியாது என்று தெரிந்த பிறகு தான், தனி மனித மேன்மையை அழிக்க முற்பட்டார்கள். அதன் ஒரு பகுதியாக மொழி மாற்றம் என்ற பெயரில், நமது அடையாளத்தை அழித்து விட்டார்கள்.
இந்த உலகம் நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளது. பல்வேறு நாடுகளில் அணு ஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன. அதையெல்லாம் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதை நினைத்து பாருங்கள்
ஒருசில நாடுகளில் உணவுகள் வீணடிக்கப்படுகிறது. ஒருசில நாடுகளில் ஒரு வேளை உணவு கூட இல்லாத நிலையில் ஏழைகள் உள்ளனர். இப்படி ஒரு உலகத்தை நீண்டகாலம் கொண்டு செல்லமுடியாது. இதில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும். நமது நாடு உயர்ந்த நாடாக உள்ளது. ஆன்மிகத்தில் உயர்ந்து இருக்கிறது.
சனாதன தர்மம்
கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதை எவ்வளவுக்கு விற்கலாம் என்று வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகளை சேர்ந்தவர்கள் எண்ணினார்கள்.
ஆனால் இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, 169 நாடுகளுக்கு இலவசமாக கொடுத்தோம். இதுதான் நமது பாரதிய சனாதன தர்மம்.
உலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், பாரதம் வலிமையாக இருக்க வேண்டும். ஒளிமயமான உலகத்துக்கு வழிகாட்டியாக நாம் இருக்கிறோம்.
இதேபோன்று பிரதமர் மோடி அமெரிக்காவில் இன்று (அதாவது நேற்று) பேசுகிறார். பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் எல்லாம் காது கொடுத்து கேட்கும் அளவுக்கு நாடு வலிமையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சென்னை சிவலோக திருமடம் ஸ்ரீலஸ்ரீ வாதவூர் அடிகளார், ஜெயந்தி விழாக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், மாநில தலைவர் பிரபாகரன், திரு.வி.க. நகர் அருள்ஜோதி அன்னை ஆலய தனலட்சுமி, ஜெயந்தி விழாக்குழு மாநில செயலாளர் சுப்பிரமணியன், டி.ஆர்.எம். சாந்தி பர்னிச்சர்ஸ் ராஜமாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.