கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பஸ்சை நிறுத்தாததால் மாற்றுத்திறனாளி மகனை 1½ கிலோ மீட்டர் தூக்கி வந்த தந்தை


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பஸ்சை நிறுத்தாததால் மாற்றுத்திறனாளி மகனை 1½ கிலோ மீட்டர் தூக்கி வந்த தந்தை
x

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பஸ்சை நிறுத்தாததால் மாற்றுத்திறனாளி மகனை 1½ கிலோ மீட்டர் தூரம் தந்தை தூக்கியபடி வந்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

மாற்றுத்திறனாளி

ஓசூர் மூக்கண்டப்பள்ளி அருகே உள்ள பேகேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வாணி ஸ்ரீ (50). இவர்களின் மகன் ஹரிபிரசாத் (16). மூளை வளர்ச்சியற்ற மாற்றுத்திறனாளி.

கோபாலகிருஷ்ணன் நேற்று தனது மனைவி, மகனுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக ஓசூரில் பஸ் ஏறினார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் பஸ் வந்த போது, கண்டக்டர் பஸ் மேம்பாலத்தின் மேலே தான் செல்லும். எனவே இங்கே இறங்கி நடந்து செல்லுங்கள் என கூறினார்.

சக்கர நாற்காலி

அதை கேட்ட கோபால கிருஷ்ணன், தனது மாற்றுத்திறனாளி மகனுடன் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என கூறியும் கண்டக்டர் மேம்பாலம் தொடங்கும் இடத்திலேயே அவர்கள் 3 பேரையும் இறக்கி விட்டு சென்றார். இதனால் தனது மகனை இரு கைகளிலும் தூக்கியபடி தந்தையும், தாயும் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு பரிதாபமாக வந்தனர்.

அவர்களை பார்த்த அங்கிருந்த போலீசார் சக்கர நாற்காலியை கொண்டு சென்று சிறுவனை அமர வைத்தனர். பின்னர் கோபால கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிதி உதவி

நாங்கள் ஓசூரில் வசித்து வருகிறோம். எனது மகனுக்கு மூளை வளர்ச்சி இல்லை. அவனுக்கு வலிப்பு நோயும் உள்ளது. எனது மகனுக்கு மாற்றுத்திறனாளி நிதி உதவி கேட்டு மனு கொடுக்க வந்தேன்.

ஓசூரில் இருந்து தர்மபுரி சென்ற அரசு பஸ்சில் நான் ஏறினேன். கலெக்டர் அலுவலகம் போக வேண்டும் என கூறி தான் ஏறினேன். ஆனால் கலெக்டர் அலுவலகம் முன்பாக மேம்பாலம் தொடங்கும் இடத்திலேயே நாங்கள் இறக்கி விடப்பட்டோம். இதனால் 1½ கிலோ மீட்டர் தூரம் மகனை தூக்கியபடி கலெக்டர் அலுவலகம் வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு திரும்பி சென்றனர்.


Next Story