தாயை தாக்கிய மகன் கைது
தாயை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
துறையூர், மே.31-
துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் இந்திராணி (வயது 62). இவருக்கு ராஜராஜேஸ்வரன் என்ற மகனும், கீதா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. மகன் பெரம்பலூர் அம்மன்பாளையத்தில் வசித்து வருகிறார். மகள் அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்த இந்திராணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை மகன் பெயரில் எழுதி வைத்துள்ளார். ராஜ ராஜேஸ்வரன் அதன்பின் தாயாரை பராமரிக்காமல் உணவுக்கு பணமும் கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி முசிறி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மகன் பெயருக்கு வீடு எழுதி கொடுத்ததை ரத்து செய்யும்படி மனு கொடுத்தார். இதனால் மகனும், மகளும் இந்திராணியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21-ந் தேதி துறையூர் செல்ல ரூ.50 ஆயிரம், 4 பவுன் தங்க சங்கிலியை மஞ்சள் பையில் வைத்துக் கொண்டு செங்காட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பஸ் நிலையத்தில் இந்திராணி நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ராஜ ராஜேஸ்வரன், முத்துலட்சுமி ஆகியோர் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் இருந்த நகை-பணத்தை பறித்து சென்றனராம். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை தாக்கியதாக ராஜராஜேஸ்வரனை கைது செய்தனர்.