தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
ஆரல்வாய்மொழியில் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
சாவு
ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்தவர் பூதலிங்க ஆசாரி (வயது 85). இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சரஸ்வதி ஏற்கனவே இறந்து விட்டார். மூத்தமகன் வேலாயுதமும், 4-வது மகன் சுப்பையாவும் ( 42) ஆரல்வாய்மொழி வில்லவிளையில் வசித்து வருகின்றனர்.
பூதலிங்க ஆசாரி 2 மகன்களின் வீடுகளிலும் மாறி, மாறி இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூதலிங்க ஆசாரி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பூதலிங்க ஆசாரி திடீரென இறந்தார்.
புகார்
இதுகுறித்து வேலாயுதம் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதில் 'என் தம்பி சுப்பையா, தந்தையுடன் தகராறு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து அவரை என் வீட்டுக்கு அழைத்து வந்து படுக்க வைத்தேன். மாலையில் இறந்துவிட்டார். என் தந்தை சாவில் சந்தேகம் உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதைத்தொடர்ந்து நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், இன்ஸ்பெக்டர் மீனா, சப் இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பூதலிங்க ஆசாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மகன் கைது
நேற்று பூதலிங்க ஆசாரியின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது அவர் உடலில் கம்பால் தாக்கியதில் உள்காயங்கள் இருந்ததும், அதில் ரத்த கட்டு இருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சுப்பையாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தந்தையை கம்பால் அடித்ததை சுப்பையா ஒப்புக்கொண்டார். அவர் கம்பால் அடித்ததால் தான் பூதலிங்க ஆசாரி இறந்தார் என்பதை தொடர்ந்து சுப்பையாவை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு தகவல்
சுப்பையா போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
எனக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக என் மனைவி சென்னையில் உறவினர் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளார். ஒரு மகள் என்ஜினீயரிங்கும், மற்றொரு மகள் பி.காமும் படித்து வருகின்றனர். நான் அவ்வப்போது சென்னைக்கு சென்று மனைவி, பிள்ளைகளை பார்த்துவிட்டு வருவேன். கடந்த சில மாதங்களுக்கு முன் பார்த்து விட்டு வந்தேன். வீட்டில் என் தந்தை மல, ஜலம் கழித்ததால், ஒரே நாற்றமாக இருந்தது.
இதனால் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து என் தந்தையை கம்பால் அடித்தேன். இரண்டு, மூன்று நாட்களாக அவரை கம்பால் அடித்து வந்தேன். 21-ந்தேதி நான் வீட்டில் கோழிக்கறி எடுத்து பொரித்தேன். பின்னர் மது குடித்து விட்டு என் தந்தைக்கும் வாங்கி வந்தேன். அவரிடம் சென்று மதுகுடியுங்கள். சிக்கனை சாப்பிடுங்கள் என்று கூறினேன். அவர் இப்போது வேண்டாம் பிறகு சாப்பிடுகிறேன் என்று கூறினார். இதனால் நான் அவரை மீண்டும் சாப்பிட வற்புறுத்தி அடித்தேன்.
மேற்கண்டவாறு சுப்பையா வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழிபோலீசார் சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றினார்கள்.