முதியவரை அடித்து கொன்ற மகன் கைது


முதியவரை அடித்து கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 7 Jun 2023 12:30 AM IST (Updated: 7 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் முதியவரை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 72). இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து திண்டுக்கல் பாரதிபுரம் பொன்சீனிவாசன் நகரில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவருடைய வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு சென்ற போது ரத்த வெள்ளத்தில் அந்தோணிசாமி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர். அதில் அந்தோணிசாமியை அவருடைய மகன் ஆரோக்கியதாஸ் கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆரோக்கியதாசை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்தோணிசாமி தனது பெயரில் இருந்த வீட்டை விற்க முயன்றுள்ளார். அதை ஆரோக்கியதாஸ் தடுத்ததால் இருவருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதற்கிடையே அந்தோணிசாமி தனக்கு மாதந்தோறும் உதவித்தொகை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஆரோக்கியதாஸ் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதுதொடர்பாக பேசுவதற்கு ஆரோக்கியதாஸ், தந்தையை பார்க்க சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் ஆரோக்கியதாஸ் கம்பியால் அந்தோணிசாமியை அடித்து கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story