தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது
ஏர்வாடி அருகே தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கடற்கரையாண்டி (வயது 49). கார் டிரைவர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் கடற்கரையாண்டிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர்களது மூத்த மகன் ராஜேஷ்குமார் தந்தைக்கு ஆதரவாகவும், 2-வது மகன் ரஞ்சித்குமார் தாயாருக்கு ஆதரவாகவும் இருந்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராஜேஷ்குமார், தனது தாயார் சுமதியை அரிவாளால் வெட்டினார். இதுதொடர்பாக ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் ரஞ்சித்குமாருக்கு தனது தந்தை கடற்கரையாண்டி, சகோதரன் ராஜேஷ்குமார் மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவில் ரஞ்சித்குமார் தனது தந்தை கடற்கரையாண்டியின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார். இதைப்பார்த்த அவர் தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றிய புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.