மாமியார் வீட்டில் நகை, பணம் திருடிய மருமகன் கைது
மானூர் அருகே மாமியார் வீட்டில் நகை, பணம் திருடிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
மானூர்:
மானூர் அருகே உள்ள ராமையன்பட்டி சிவாஜி நகர் அரசு புதுக்காலனியை சேர்ந்தவர் பேபி (வயது 49). இவர் கடந்த 20 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
மூத்த மகள் மாரியம்மாளை தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 24-ந் தேதி மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டிக்கு வந்தார். அப்போது, சுரேஷ் தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மாமியாரான பேபியிடம் ரூ.2 ஆயிரம் வாங்கி வரும்படி கூறினார். ஆனால் பேபி பணம் இல்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து பேபி தனது மகள் மாரியம்மாள், அவரது குழந்தைகளை அழைத்துக் கொண்டு மானூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அங்கு இருந்து 27-ந் தேதி அவர்களை தூத்துக்குடிக்கு பஸ் ஏற்றி அனுப்பி விட்டு தனது வீட்டிற்கு பேபி வந்தார்.
அப்போது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த தங்க கம்மல், ரூ.500 மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பேபி மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த பேபியின் மருமகன் சுரேஷ் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.