தொழிலாளி கொலை வழக்கில் மருமகன் கைது
லத்தேரியில் தொழிலாளி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மருமகன் கைது செய்யப்பட்டார். சொத்தை பிரித்து கொடுக்காததால் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளி கொலை
கே.வி.குப்பத்தை அடுத்த லத்தேரி, கலைஞர் நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 62), தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளி. இவர்குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மகனைபிரிந்து மகள் ஜெயலட்சுமி வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 25-ந் தேதி இரவு செல்வம், வீட்டுக்கு வெளியே தூங்கினார். அடுத்த நாள் காலையில் அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், காட்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி தலை மையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மருமகன் கைது
சந்தேகத்தின் பேரில் ஜெயலட்சுமியின் கணவர் பிரபாகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வத்தை, அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
செல்வத்துக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய பிரபாகரன் கேட்டுள்ளார். ஆனால் செல்வம், அதில் ஒரு சிறு பகுதியை மட்டுமே தருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த நிலத்தை செல்வம் அவரது மகன்பெயரில் எழுதி வைத்துவிடுவார் என்ற சந்தேகம் வலுத்து வந்தது. இதனால் பிரபாகரன், செல்வத்தின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு மதுபோதையுடன் வந்த செல்வத்திடம் மீண்டும் நிலத்தை பிரித்துக் கேட்டு பிரபாகரன் தகராறு செய்துள்ளார். இதை ஏற்றுக் கொள்ளாத செல்வத்தை தலைமீது காலால் மிதித்துளார். இதனால் செல்வம் அலறினார். சத்தம் கேட்காமல் இருக்க தலையணையால் செல்வத்தின் முகத்தை அழுத்தி மீண்டும் காலால் மிதித்து கொலை செய்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமியை மிரட்டி இதை யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.