ஆத்தூர் அருகே பரிதாபம்-ஒன்றிய கவுன்சிலரின் மகன் விஷம் குடித்து தற்கொலை
ஆத்தூர் அருகே தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரின் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆத்தூர்:
தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி பாவடி தெருவை சேர்ந்தவர் சேகர். ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர். இவருடைய மகன் அருண் (வயது 33). டிப்ளமோ பட்டதாரி. அருண், தன்னுடைய தந்தை நடத்தி வரும் மளிகை கடையில் உதவியாக இருந்து வந்தார்.
அவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாகவும், அதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அருண் கடந்த 23-ந் தேதி விஷம் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் சாவு
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அருண் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அருண் தற்கொலைக்கு வயிற்று வலி காரணம் என்று கூறப்பட்டாலும், வேறு காரணம் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.