மலேசியா நாட்டில் இருந்து மகனை மீட்டு தர வேண்டும் -பெற்றோர் கலெக்டரிடம் மனு
மலேசியா நாட்டில் இருந்து மகனை மீட்டு தர வேண்டும் என்று பெற்றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மலேசியா நாட்டில் இருந்து மகனை மீட்டு தர வேண்டும் என்று பெற்றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுஅளித்தனர்.
திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த சேதுராமன் கொடுத்த மனுவில், எனது மகன் மணி கடந்த 2020-ம் ஆண்டு மலேசிய நாட்டிற்கு கேட்டரிங் வேலைக்கு சென்றார். அங்கு அவர் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். எங்களுடன் மாதந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவார், இந்தநிலையில் கடந்த 7 மாதமாக மணியிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவருடன் பணிபுரிந்த திருச்சியை நேர்ந்த நண்பர்களிடம் கேட்ட போது, அவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளதாக கூறினர். எனது மகன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? என்று தெரியவில்லை. எனது மகனை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தீயணைப்பு வீரர்
திருச்சி தீயணைப்பு வீரர் பிரசாந்த் கொடுத்த மனுவில், நான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் பணி புரிந்து கொண்டிருந்த போது சிலிண்டர் காற்று நிரப்பும் போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் எனது வலது காலில் எலும்புகள் சிதைந்து காலை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே மேற்கூறிய காரணங்களால் தொடர்ந்து தீயணைப்பாளர் பொறுப்பினை செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே இளநிலை உதவியாளராக பணிபுரிய எனக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அடிப்படை வசதி
பாகனூர் ஊராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் வளர்மதி மணிகண்டன் கொடுத்த மனுவில், எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருவெறும்பூர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், திருவெறும்பூர் நேதாஜி நகர், எலக்ட் காலனி, செல்வபுரம், சுப்ரமணியபுரம், கக்கன் காலனி, புத்து கோவில் தெரு, சுருளி கோவில் தெரு, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மதுபான பார் திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இப்பகுதி மக்களின்நலன் கருதி மதுபான பார் திறக்க கூடாது என்று கூறியுள்ளனர்.
கூடுதல் ரெயில்
இந்திய மாணவர் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், திருச்சியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தஞ்சையில் உள்ள கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் நலன்கருதி திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கூடுதல் ரெயில் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். முன்னதாக ரெயில் போல் வரிசையாக வந்து மாணவர்கள் மனு கொடுத்தனர்.
முகவர்கள்
திருச்சி மாவட்ட ஆவின் பால் விற்பனை முகவர்கள் நலச்சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், ஆவின் பால் கார்டு விற்பனை செய்வதற்கும், முகவர்கள் தினசரி பணம் செலுத்துவதற்கும் சிந்தாமணியில் தொடர்ந்து பணம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதரச்சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 722 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.