பாலமேடு அருகே தந்தையை கழுத்தில் மிதித்து கொன்ற மகன்- செலவுக்கு பணம் தர மறுத்ததால் கொடூர செயல்


பாலமேடு அருகே செலவுக்கு பணம் தர மறுத்த தந்தையை கழுத்தில் மிதித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

அலங்காநல்லூர்,

பாலமேடு அருகே செலவுக்கு பணம் தர மறுத்த தந்தையை கழுத்தில் மிதித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

கழுத்தில் மிதித்து கொலை

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் போஸ் (வயது 64). மின்வாரியத்தில் போர்மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செல்வி (57). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது 3-வது மகன் சரவணகுமார்(33). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி குமார்போசுக்கு ஓய்வூதிய தொகை வந்துள்ளது. இதனை அறிந்த சரவணகுமார் செலவுக்கு பணம் கேட்டு நேற்று முன்தினம் இரவு தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த சரவணகுமார், தனது தந்தை குமார்போைச அடித்து உதைத்து கீழே தள்ளி விட்டார். ேமலும் அவரது கழுத்தில் மிதித்துள்ளார்.

கைது

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். தந்தையை கொலை செய்த சரவணக்குமாரை பாலமேடு போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story