காலையில் மகன் திருமணம் மாலையில் மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தொழிலாளி கீழே விழுந்து சாவு
கோபி அருகே காலையில் மகன் திருமணத்தை முடித்துவிட்டு மாலையில் மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
கடத்தூர்
கோபி அருகே காலையில் மகன் திருமணத்தை முடித்துவிட்டு மாலையில் மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
மகனுக்கு திருமணம்
கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மாகாளி என்கிற மூர்த்தி (வயது50). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு பெரிய அம்மணி என்கிற மனைவியும், ரங்கசாமி (27), ரங்கநாயகி (24), ஸ்ரீதேவி (20) என்ற மகள்களும் உள்ளனர். ரங்கசாமி கோவையில் தங்கியிருந்து விமான நிலையத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ரங்கசாமிக்கும், கெட்டிசெவியூர் அருகே உள்ள செஞ்சிலாபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகள் கோகிலாவுக்கும் நேற்று காலை சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
மகளுடன் ஸ்கூட்டரில் சென்றார்
திருமணத்துக்கு பிறகு மணமக்கள், உறவினர்கள் அனைவரும் நல்லகவுண்டன்பாளையத்துக்கு வேனில் சென்று விட்டனர். அதைத்தொடர்ந்து மாகாளியும், ரங்கநாயகியும், பண்ணாரி அம்மன் கோவிலில் மற்ற வேலைகளை முடித்து விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர்.
ஸ்கூட்டரை மாகாளி ஓட்டி சென்றார். ரங்கநாயகி அவருக்கு பின்னால் அமர்ந்திருந்தார். கோபியை அடுத்த கொடிவேரி பிரிவு அருகே சென்றபோது மாகாளி நெஞ்சு வலிப்பதாக ரங்கநாயகியிடம் கூறிக்கொண்டு ஸ்கூட்டரை நிறுத்த முயன்றுள்ளார். அதற்குள் நிலைதடுமாறி ஸ்கூட்டர் ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது.
சாவு
இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் மாகாளி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரங்கநாயகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகன் திருமண நாளன்று தந்தை இறந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாகாளியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.