சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் காந்திராஜன் எம்.எல்.ஏ. உள்பட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
வடமதுரையில் 300 ஆண்டுகள் பழமையான சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை சுதர்சன பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர் பூர்ணாகுதி, புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், மகா தீபாராதனை, காயத்ரி ஹோமம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் நேற்று காலை 9 மணிக்கு மேளதாளங்கள் முழங்க புனித தீர்த்த குடங்கள் கோபுர கலசங்களுக்கு கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, ராஜகோபுரம், சொர்க்கவாசல் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கோவிந்தா கோஷம்
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். பின்னர் வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதையடுத்து மாலையில் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, வடமதுரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி தலைவர் நிருபாராணி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், தென்னம்பட்டி ஊராட்சி முன்னாள் செயலாளர் இளங்கோ, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பழனிச்சாமி, பரமசிவம், காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜரத்தினம், பா.ஜ.க. மேற்கு மண்டல துணை தலைவர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் விஸ்வநாத், செயல் அலுவலர் கற்பக வெண்ணிலா, திருப்பணி பொறுப்பாளர்கள் பத்மநாபன், முரளிராஜன், மற்றும் ஊர் மக்கள் செய்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துர்காதேவி, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.