தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு
திருச்சி-தஞ்சாவூர் இடையே செல்லும் ரெயிலின் வேகத்தை 120 கி.மீட்டராக அதிகரிப்பது தொடர்பாக தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.
பொதுமேலாளர் ஆய்வு
மதுரை-திருச்சி, திருச்சி-தஞ்சை இடையே உள்ள ரெயில் பாதையில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார். தற்போது திருச்சி-தஞ்சை இடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரெயிலின் வேகத்தை 120 கிலோமீட்டராக அதிகரிப்பது தொடர்பாக அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கோட்ட மேலாளர்கள் மனீஷ்அகர்வால் (திருச்சி), ஆனந்த் (மதுரை), முதுநிலை இயக்க மேலாளர் ஹரிகுமார், முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்விற்கு பிறகு தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்த தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை தஞ்சை ரெயில் நிலைய மேலாளர் சம்பத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
கோரிக்கை மனுக்கள்
அப்போது பொதுமேலாளரிடம் தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் கிரி, பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் ஜெயராமன் ஆகியோர் சங்க நிர்வாகிகளுடன் தனித்தனியாக மனு அளித்தனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் மேற்கூரை அமைக்க வேண்டும். தஞ்சை மற்றும் கும்பகோணம் ரெயில் நிலையங்களில் பயணிகள் தங்கும் விடுதிகளை மீண்டும் திறக்க வேண்டும். திருச்சி-சென்னைக்கு மெயின் லைனில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும். திருச்சி-மும்பை மெயின் லைனில் புதிய ரெயில் இயக்க வேண்டும். ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும்.
ஜனதா ரெயில்
தஞ்சை-விழுப்புரம் இடையே இருவழி அகல ரெயில்பாதைக்கு அனுமதி வழங்க வேண்டும். தஞ்சை, கும்பகோணத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும். மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம்பரம்- தூத்துக்குடிக்கு இயக்கப்பட்ட ஜனதா ரெயிலை மீண்டும் மெயின் லைனில் இயக்க வேண்டும்.
திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் போதியளவு கேட்கீப்பர்களை நியமிக்க வேண்டும். சென்னை-காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சை வழியாக பழனி மற்றும் போடிநாயக்கனூர் மார்க்கங்களில் புதிய ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். திருச்சி-அகமதாபாத் ரெயிலை நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
தஞ்சை பெரியகோவில்
இந்த மனுக்களை பெற்று கொண்ட பொதுமேலாளர் ஆர்.என்.சிங் இது குறித்து பரிசீலித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் பொதுமேலாளர், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சை பெரிய கோவில், கல்லணை, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.