தரைக்கடைகள் வைக்க இடம் ஒதுக்க வேண்டும்
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் தரைக்கடைகள் வைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 333 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கலெக்டர் மனுக்கள் பெற்று கொண்டார்.
தரைக்கடைக்கு இடம்
கூட்டத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சங்க மாவட்ட தலைவர் செல்வம் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் அளித்த மனுவில், வேலூர் புதிய, பழைய பஸ்நிலையங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுகளாக தரைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த 4-ந் தேதி முதல் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் தரைக்கடை வைக்கக் கூடாது என்று போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் கூறி வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கின்றனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தரைக்கடை வியாபாரிகளுக்கு வேலூர் புதிய பஸ்நிலையத்தில் வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.
கணியம்பாடி ஒன்றியம் கம்மசமுத்திரம் பழைய பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறோம். கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
வேலூர் கொணவட்டம் வசந்தம்நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், வேலூர் மாநகராட்சி 31-வது வார்டு முதல் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் தெருவில் சாலை அமைக்க பள்ளம் தோண்டியதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் தெருவில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைத்து, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வீட்டுமனை பட்டா
இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேலூர் மாவட்ட செயலாளர் லதா தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், காட்பாடி அருகே உள்ள பொன்னை பகுதியில் கட்டுமான வேலை செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும். குடியாத்தம் தலைமை மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில தலைவர் பாஸ்கரன், மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் அளித்த மனுவில், வேலூர் மத்திய ஜெயிலில் மாற்றுத்திறனாளிகள் பலர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அங்கு சிறப்பு முகாம் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
வீட்டை மீட்டுத்தர வேண்டும்
குடியாத்தம் தாலுகா சேத்துவண்டையை அடுத்த சென்றாயன்பள்ளியை சேர்ந்த சீனிவாசலு மனைவி குப்பம்மாள் (வயது 92) அளித்த மனுவில், எனக்கு சொந்தமான 5 சென்ட் வீட்டை எனது மகள்கள் என்னை ஏமாற்றி வேறொருவருக்கு விற்று விட்டனர். எனவே எனது வீட்டை மீட்டுத் தரவேண்டும் என கூறியிருந்தார்.
அணைக்கட்டு தாலுகா சின்ன கோவிந்தம்பாடியை சேர்ந்த ரமேஷ் மனைவி சுதா, பாபு மனைவி பவுனம்மாள் ஆகியோர் பள்ளி சீருடையுடன் மகள்களை அழைத்து வந்து அளித்த மனுவில், எங்களது மகள்கள் அரசுப்பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் பள்ளியில் படிப்பதற்கும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கவும் சாதிச்சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
கூட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சிறப்பாக பணியாற்றிய ரம்யா மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பாராட்டு வழங்கினார்
இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டார்.