சரக்கு ரெயிலில் தீப்பொறி பறந்ததால் பரபரப்பு
நாகர்கோவிலில் இணைப்பு சக்கரம் பழுதாகி தீப்பொறி பறந்ததால் பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
நாகா்கோவில்:
நாகர்கோவிலில் இணைப்பு சக்கரம் பழுதாகி தீப்பொறி பறந்ததால் பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
சரக்கு ரெயிலில் தீப்பொறி...
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் திருநெல்வேலி நோக்கி புறப்பட்டது. ெரயிலில் 87 வேகன்கள் பொருத்தப்பட்டு இருந்தன. நேற்று காலையில் இந்த ரெயில் நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது ரெயிலில் கடைசியாக இணைக்கப்பட்டிருந்த கார்டு பெட்டியில் இருந்து 7-வது வேகனில் உள்ள 2 சக்கரங்கள் திடீரென பழுதானதாக தெரிகிறது. இதனால் தண்டவாளத்தில் சக்கரங்கள் ஓடாமல் அதில் உரசியபடி சென்றுள்ளது. எனவே அந்த பகுதியில் இருந்து தீப்பொறியும் கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடுவழியில் நிறுத்தம்
இதனை கண்ட கார்டு பெட்டியில் இருந்த ரெயில்வே ஊழியர், என்ஜின் டிரைவருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தார். உடனே சுதாரித்துக் கொண்ட டிரைவர், ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். தொடர்ந்து டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர் இருவரும் சம்பந்தப்பட்ட வேகனை ஆய்வு செய்தனர். அதே சமயத்தில் நாகர்கோவில் ரெயில்வே ஊழியர்களுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
டிரைவர் அந்த ரெயில் சக்கரத்தை ஆய்வு செய்த போது, அதில் உள்ள பிரேக் செயல் இழந்து சக்கரத்தை பிடித்தபடி இருந்தது. இதனால் சக்கரம் தண்டவாளத்தில் ஓடாமல் இருந்ததும், தீப்பொறி கிளம்பியதும் தெரிய வந்தது. இந்த பழுதை டிரைவரும், ரெயில்வே ஊழியரும் இணைந்தே சரி செய்தனர். இதற்கிடையே அங்கு மற்ற ரெயில்வே ஊழியர்களும் விரைந்தனர்.
பரபரப்பு
அவர்கள் பழுதான பகுதி சரி செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரெயிலின் சக்கரத்தில் இருந்து தீப்பொறி பறந்ததால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.