ஜே.பி.நட்டா, மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டதாக கூறுகிறார். அங்கு சிகிச்சை பெற செல்ல முடியுமா? சபாநாயகர் அப்பாவு


ஜே.பி.நட்டா, மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டதாக கூறுகிறார். அங்கு சிகிச்சை பெற செல்ல முடியுமா? சபாநாயகர் அப்பாவு
x
தினத்தந்தி 2 Oct 2022 9:35 PM GMT (Updated: 3 Oct 2022 6:00 AM GMT)

அ.தி.மு.க. பிளவால் சட்டசபையில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்றும், அனைவரும் விரும்பும் வகையில் அவர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்

திருநெல்வேலி

அ.தி.மு.க. பிளவால் சட்டசபையில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்றும், அனைவரும் விரும்பும் வகையில் அவர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

கிராமசபை கூட்டம்

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்த பிரச்சினையும் வராது

காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் காந்தியை கொன்றவர்களை மதிக்கக்கூடாது. அவர்களை மதிப்பது வேதனைக்குரியது.

அ.தி.மு.க. 4 அணிகளாக உள்ளது. அ.தி.மு.க. பிளவால் சட்டசபையில் எந்த பிரச்சினையும் வராது. இந்த மாதம் சட்டசபை கூடுகிறது. அப்போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும். தி.மு.க. அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர்கள் சாதாரணமாக பேச்சு வழக்கில் பேசுவது கூட பெரிதாக்கப்படுகிறது.

படிப்பறிவு இல்லை

தமிழகத்தில் அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்களுக்கு படிப்பறிவு இல்லை என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்து இருப்பது வன்மையான வார்த்தை ஆகும். நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை கருதி கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் பட்டதாரிகளின் சராசரி 24 சதவீதம் என்றால், தமிழகத்தில் 51 சதவீதம் ஆகும். ஜே.பி.நட்டா தமிழகத்தில் இருப்பவர்களை விட அதிகம் படித்தவர். ஜே.பி.நட்டா மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டதாக கூறுகிறார். அங்கு சிகிச்சை பெற செல்ல முடியுமா?

தி.மு.க. அரசின் நல்லாட்சியை கொச்சைப்படுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதுபடுத்தாமல், அரசின் திட்டங்களை சிறப்பாக செய்ய ஆலோசனை வழங்குங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story