அருணாசலேஸ்வரர் கோவிலில் லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாக சிவராத்திரி விழாவும் ஒன்றாகும்.
திருமாலும், பிரம்மாவும் சிவபெருமானின் அடிமுடி காணாமல் திகைத்த போது அவர் லிங்கோத்பவ மூர்த்தியாக அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று பகலில் கோவிலில் லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலில் இரவு முதல் இன்று அதிகாலை வரை 4 கால பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு கோவில் முன்பும், ஈசான்ய மைதானத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
சிறப்பு அபிஷேகம்
மேலும் கோவிலில் சாமி சன்னதியில் உள்ள லிங்கோத்பவ மூர்த்தி சன்னதியின் முன்பு மகா சிவராத்திரியை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு பால், தேன், பஞ்சமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் லிங்கோத்பவ மூர்த்திக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
இந்த பூஜையில் மகா சிவராத்திரியின் போது பயன்படுத்தப்படும் தாழம்பூ பயன்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
நீண்ட வரிசையில் பக்தர்கள்
இந்த நிலையில் இன்று விடுமுறை நாள் என்பாதலும், நேற்று முன்தினம் மகா சிவராத்திரி என்பதாலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தந்தனர்.
இதனால் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.