குரும்பப்பட்டி பூங்காவில் கோடை வெப்பத்தை சமாளிக்க விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடு
கன்னங்குறிச்சி:-
குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கோடை வெப்பத்தை சமாளிக்க விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குரும்பப்பட்டி பூங்கா
சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் பல்வேறு வன உயிரினங்கள் பரமாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கோடை வெயிலில் இருந்து விலங்குகளை சமாளிக்க வனத்துறை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து குரும்பப்பட்டி வன சரக அலுவலர் உமாபதி கூறியதாவது:-
குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கோடை காலத்தையொட்டி வன விலங்குகள் வெப்பத்தை தடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூங்காவில் ஒரு பெரிய முதலையும், ஒரு குட்டி முதலையும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவைகள் இருக்கும் தொட்டியில் எப்போதும் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளன.
பூங்காவில் 24 கடமான்களும், 40 புள்ளி மான்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை வெயிலை அவைகள் சமாளிக்க பராமரிக்கப்படும் இடத்தில் 'ஸ்பிரிங் லிங்க் வாட்டர்' மூலம் காலை முதல் மாலை வரை தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் மான்கள் ஆனந்தமாக குளித்து விளையாடி வெயிலின் தாக்கத்தை குறைத்து வருகின்றன.
பசுமை போர்வை
பூங்காவில் உள்ள வெளிநாட்டு நீர்ப்பறவைகள், செங்கல் நாரை, சாம்பல் நிற நாரை, லவ்பேர்ட்ஸ் பறவைகள், கிளிகள் உள்ள கூண்டுகளுக்கு பசுமை போர்வை அமைக்கப்பட்டதுடன் சாரல் நீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
பூங்கா முழுவதும் மரங்களால் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருப்பதால், பூங்காவின் உள்ளே குளிர்ந்த சீதோஷ்ணமான நிலை காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தினமும் பூங்காவுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.