ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம்


ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன்  இணைக்க சிறப்பு முகாம்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி

சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் www.nvsp.in மற்றும் Voters Helpline App என்ற இணையதளத்தில் தாங்களாகவே ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளலாம்.

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கருடா கைபேசி செயலி மூலமாகவும் மற்றும் இதற்கான படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்வதன் மூலமாகவும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர். பொதுமக்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இணைத்து கொள்ளவும்

இந்த மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் சென்று உரிய படிவம் (படிவம் -6பி) பூர்த்தி செய்து, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story