வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் மீண்டும் சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் மீண்டும் சிறப்பு முகாம்
x

2 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் இறுதி வாய்ப்பாக இருப்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயரை சேர்க்கவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறி சென்றவர்கள் திருத்தம் செய்யவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள படிவங்கள் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களுடன் கொடுப்பதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. இதன்மூலம் சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயன் அடைந்தனர். அதனை தொடர்ந்து 2-வது கட்டமாக சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் நடைபெறுகின்றன.

சென்னையில் 3,723 வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் இந்த மையங்கள் நடக்கின்றன. படிவங்கள், 6, 6ஏ, 7 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம். சென்னையில் கடந்த முகாமில் 23,519 பேர் திருத்தம் மேற்கொள்ள மனுக்கள் கொடுத்தனர். அரசியல் கட்சியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் இறுதி வாய்ப்பாக இருப்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒவ்வொரு மையங்களிலும் ஒரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. மையங்களுக்கு செல்லாமல் www.nvsp.in என்ற இணைய தளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Next Story