ஆட்டோ டிரைவர் நலவாரிய பதிவுக்கான சிறப்பு முகாம்
கும்பகோணத்தில் ஆட்டோ டிரைவர் நலவாரிய பதிவுக்கான சிறப்பு முகாம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
கும்பகோணத்தில் ஆட்டோ டிரைவர் நலவாரிய பதிவுக்கான சிறப்பு முகாம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
நலவாரிய பதிவு சிறப்பு முகாம்
தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையின் கீழ் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் போன்ற பல்வேறு வகையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரூ.1 லட்சம் மானியம்
சமீபத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்கள் அமைப்புசாரா டிரைவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் பொருட்டு தஞ்சை மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி பதிவு குறைவாக உள்ள ஆட்டோ டிரைவர்களின் நலவாரிய பதிவை அதிகரிக்க நலவாரிய பதிவு சிறப்பு முகாம்கள் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியில் உள்ள தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலக (தராசு முத்திரை) வளாகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இதர வாகன டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆவணங்கள்
ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அசல் ஆவணங்களுடன் டிரைவர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர் நலவாரியத்தில் பதிவு செய்து அரசு வழங்கும் பல்வேறு வகையான நலத்திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.