தென்னை விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
செங்கோட்டை அருகே தென்னை விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.
செங்கோட்டை:
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மாநில தலைமையகம் தென்னை விவசாயிகளின் நலன் கருதி தென்னை அதிகமாக சாகுபடி செய்யும் கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் ஆலோசனையின்படி செங்கோட்டை வட்டாரத்தில் அதிகமாக தென்னை சாகுபடி செய்து வரும் அச்சன்புதூர் கிராமத்தில் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) முகுந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் சிவப்பிரகாஷ் தொழில்நுட்ப உரையாற்றினார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன், தென்னையில் அதிக மகசூல் பெற எவ்வாறு உரமிட வேண்டும், என்னென்ன உரங்களை இடவேண்டும் என்பது பற்றி விளக்கி கூறினார்.
முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய விளக்க துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் தென்னை பயிர் பாதுகாப்பு முறைகளை எவ்வாறு மேற்கொள்வது, தென்னையை தாக்கும் பூச்சி நோய்கள் என்னென்ன என்பது பற்றி விளக்கி கூறப்பட்டது. மேலும் சமீப காலமாக தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை தண்ணீரை பீய்ச்சியடித்து எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அச்சன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான சம்சுதீன், கட்டாரிபாண்டியன், வாசுதேவன், மீராகனி உள்ளிட்ட தென்னை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அச்சன்புதூர் உதவி வேளாண்மை அலுவலர் சம்சுதீன் மற்றும் ஸ்டாலின் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.