குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.
மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்றவற்றுக்கான சிறப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். இதுதவிர பொது வினியோக திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன் பெறலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையில் மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயன்பெறலாம்.
இதை தவிர ரேஷன் கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளின் செயல்பாடுகளில் குறைபாடு இருப்பின் விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் குறைகள் இருப்பின் இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.