மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அட்டை வழங்கும் சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
x

860 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 1-ந் தேதி முதல் 10 நாட்கள் நடக்கிறது.

திருவண்ணாமலை

860 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 1-ந் தேதி முதல் 10 நாட்கள் நடக்கிறது.

முன்னுரிமை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் 25.5.2012-ம் நாளிட்ட அரசாணை (நிலை) எண் 52-ன் படி தழிழ்நாடு அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும்.

இந்த அரசாணையின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தன் கீழ் அட்டைகோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 20 ஆயிரத்து 355 மாற்றுத்திறனாளிகளுக்கு நீல நிறத்திலான வேலை அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம்

மேலும் மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமையன்று வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்க்கிழமையன்று கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) முன்னிலையிலும் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு புதிதாக வேலை அட்டை வழங்குவதற்கும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் ஏதுவாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமினை பயன்படுத்தி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதியை சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story