வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்
அஞ்சல் துறை சார்பில் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் ஆண்டுதோறும் ரூ.2000 வீதம் 3 தவணைகளாக ரூ.6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவியை பெற வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியமாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் சுமார் 8000 பேர் இதுவரை வங்கிக்கணக்குடன் ஆதார் இணைக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்குகளை தொடங்க இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் வங்கி கணக்கு தொடங்க முடியும். எனவே விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் வருகிற 15-ந்தேதிக்குள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தோ, அல்லது புதிய வங்கி கணக்கு தொடங்கியோ பயன்பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்தார்.