மாணவர்களின் வீண் அலைச்சலை தவிர்க்கபள்ளிகளில் ஆதார் சேவை, வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும்கலெக்டருக்கு பெற்றோர்கள் கோரிக்கை


மாணவர்களின் வீண் அலைச்சலை தவிர்க்கபள்ளிகளில் ஆதார் சேவை, வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும்கலெக்டருக்கு பெற்றோர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் வீண் அலைச்சலை தவிர்க்க பள்ளிகளில் ஆதார் சேவை, வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று கலெக்டருக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விழுப்புரம்


இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், உதவித்தொகையை பெறவும், வங்கிகளில் கணக்கு தொடங்கவும் ஆதார் எண், அவசிய தேவையாக கருதப்படுகிறது.

ஆதார் புதுப்பிப்பு பணி

ஆதாரை பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பயோமெட்ரிக் மூலம் புதுப்பித்தல் வேண்டும். ஒரு வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் முறையாக ஆதார் எடுக்கும்போது ஒருமுறை ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டும். அதன் பின்னர் 5 வயது பூர்த்தியடைந்ததும் 2-வது முறையாக ஆதாரை புதுப்பிக்க வேண்டும்.

பின்னர் 15 வயது பூர்த்தியடைந்ததும் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வயது உயர்வினாலும் மற்றும் உடல் தோற்றத்தினாலும் ஆதாரில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணியை மேற்கொள்வது என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. ஆதார் புதுப்பிப்பதற்காகவும், பெயர், பிறந்த தேதி, முகவரி, செல்போன் எண் இவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் அதை சரிசெய்வதற்கும், இதுதவிர புதியதாக ஆதார் எடுக்கவும் தினந்தோறும் ஆதார் சேவை மையங்களை பொதுமக்கள் நாடிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

அரசு உதவித்தொகைக்கு அவசியம்

தற்போது தமிழகத்தை பொறுத்தவரை மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கை செய்வதற்குகூட பிறப்பு சான்றிதழுடன் ஆதாரையும் அவசியமாக கேட்கின்றனர். இதுதவிர 6-ம் வகுப்பு முதல் மாணவ-மாணவிகளுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காகத்தான் பள்ளிக்கல்வித்துறையில் கல்வி தகவல் மேலாண்மை என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அவற்றின் மூலம் பள்ளிகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பல விவரங்கள் சேகரிக்கப்பட்டு இணையதளத்தில் அவை பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கும்போது அந்த மாணவ- மாணவிகளின் ஆதார் எண்ணும் சேகரிக்கப்படுகிறது. ஆதார் எண் இல்லாதபட்சத்தில், அந்த மாணவ- மாணவிகளது பெற்றோர்களின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.

அலைமோதும் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 4 லட்சம் மாணவ- மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் இன்னும் சில மாணவ- மாணவிகளுக்கு ஆதார் எண் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில் ஆதார் அட்டை இல்லாத மாணவ- மாணவிகளுக்கு அரசு உதவித்தொகை மற்றும் நலத்திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் ஆதார் எண், வங்கி கணக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வங்கி கணக்கில் உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படுவதால், வங்கி கணக்கு தொடங்கி அதனுடன் ஆதார் எண் சமர்பிக்க வேண்டியுள்ளது.

வங்கி கணக்கு தொடங்க மாணவர்களின் கைரேகை அவசியமாக்கப்பட்டுள்ளதால் ஆதாரில் பயோமெட்ரிக்கில் கைரேகையை புதுப்பிக்காத மாணவர்கள் புதுப்பிக்க வேண்டுமென வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். ஆதாரில் பயோமெட்ரிக்கில் கைரேகை புதுப்பிக்காத காரணத்தினாலும் கல்வி உதவித்தொகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்காக மாணவ- மாணவிகள், பள்ளிக்கு செல்லாமல் தங்கள் பெற்றோருடன் வங்கிக்கும், ஆதார் சேவை மையங்களுக்கும் சென்று வருகின்றனர். இதனால் வங்கிகள் மற்றும் ஆதார் சேவை மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம்

மேலும் இதுவரை ஆதார் அட்டை எடுக்காத மாணவர்களும் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால், அங்குள்ள ஆதார் மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமை உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி, திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக சேவை மையங்கள் இயங்கி வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் மேற்கண்ட அலுவலகங்களில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு மாணவ- மாணவிகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் விவசாய கூலி வேலை செய்பவர்கள்தான் அதிகம். அவர்கள் அன்றாட வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளுடன் வங்கிக்கும், ஆதார் மையத்துக்குமாக அலைந்து பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

இதனால் இவர்களின் அறியாமையை சில இடைத்தரகர்கள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவர்களிடம் எந்தளவிற்கு பணத்தை கறக்க முடியுமோ அந்தளவிற்கு கறந்து வருகின்றனர்.

மாணவ- மாணவிகள் அவதி

விழுப்புரம் மாவட்ட தலைநகரில் வசிப்பவர்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் செயல்படும் ஆதார் சேவை மையங்களுக்கு வந்து செல்கின்றனர். மற்ற கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், அந்தந்த தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள மையத்துக்கு செல்கின்றனர். ஏற்கனவே அதிக கூட்டம் இருக்கும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களும் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவ- மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள், ஆதார் சேவையை பெறுவதற்காக ஒரு நாள் பள்ளியில் விடுமுறை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.

அப்படியே வந்தாலும் சில சமயங்களில் ஆதார் அட்டை எடுக்க கூட்டம் அதிகமாக இருந்தால் மீண்டும் மறுநாள் வர வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி சில சமயங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக ஆதார் எடுக்கும் பணியும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறாக மாணவ- மாணவிகள் ஆதார் சேவையை எளிதில் பெற முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பள்ளிகளில் சிறப்பு முகாம்

எனவே மாணவ- மாணவிகளின் வீண் அலைச்சலை தவிர்க்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் வாரந்தோறும் ஆதார் சேவை மற்றும் வங்கி கணக்கு தொடங்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story