தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கி]மையும் நடக்கிறது.

தூத்துக்குடி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வாக்காளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடம் இருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. நமது மாவட்டத்தில் இதுவரை 61 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர்.

சிறப்பு முகாம்

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்திடவும் மனுக்கள் பெற்றிட இன்றும் (சனிக்கிழமை) மற்றும் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. மேற்படி சிறப்பு முகாம் நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். 01.01.2023 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளிக்கலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

இதில் பெறப்படும் விண்ணப்பங்கள்; அனைத்தும் பரிசீலனை மற்றும் கள ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி, 2023-ம் மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story