விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கான கடன் உதவி பெற சிறப்பு முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கான கடன் உதவி பெற சிறப்பு முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சார்ந்த பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 கோடியும் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.2 கோடி அளவிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது.
இதற்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்க சிறப்பு லோன் முகாம்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
திண்டிவனம், மரக்காணம்
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதியும், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் 28-ந் தேதியும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதியும், வானூர் தாலுகா அலுவலகத்தில் 3-ந் தேதியும், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் 4-ந் தேதியும், திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் 8-ந் தேதியும், மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் 10-ந் தேதியும், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் 11-ந் தேதியும், மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் 15-ந் தேதியும் ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை லோன் மேளா நடைபெறும்.
ஆவணங்கள்
கடன் விண்ணப்பங்களானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலும் கிடைக்கப்பெறும். முகாமில் கலந்துகொள்ள வரும் முன்பே விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
+ கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். எனவே இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இச்சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு கடனுதவி பெற்று பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.