வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை உறுதி செய்யவும், ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுக்கவும் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 1.8.2022 முதல் தொடங்கி நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 14 லட்சத்து 68 ஆயிரத்து 937 வாக்காளர்களில் இதுவரை 9 லட்சத்து 34 ஆயிரத்து 309 வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்து உள்ளனர். இது 63.60 சதவீதம் ஆகும்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பதற்கு 31.3.2023 நாளை இறுதி நாளாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இரு நாட்கள் வாக்காளர்களிடம் ஆதார் எண் பெறும் சிறப்பு முகாம் நடக்கிறது.

இந்த சிறப்பு முகாமில் இதுவரை ஆதார் எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பியை பூர்த்தி செய்து ஆதார் அட்டை நகலுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம். மேலும் ஆன்லைன் மூலமும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். எனவே இதுவரை ஆதார் எண் இணைக்காத வாக்காளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்து தவறுகள் இல்லாத தூய்மையான வாக்காளர் பட்டியல் உருவாக்கிட வாக்காளர்களின் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story