247 கிராம ஊராட்சிகளில் சிறப்பு பிரசார இயக்கம்


247 கிராம ஊராட்சிகளில் சிறப்பு பிரசார இயக்கம்
x

வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகளில் நாளை முதல் பல்வேறு கட்டங்களாக சிறப்பு பிரசார இயக்கம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகளில் நாளை முதல் பல்வேறு கட்டங்களாக சிறப்பு பிரசார இயக்கம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு பிரசார இயக்கம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சிகளில் குடிநீர், சுகாதாரம், திட, திரவக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையால் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற சிறப்பு பிரசார இயக்கம் அனைத்து அரசு துறைகளையும் இணைத்து நாளை (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்த பிரசாரத்தின் முதற்கட்டமாக கிராமப்புறங்களில் உள்ள பொது இடங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள், நீர்நிலைகள், சந்தைப்பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் ஒட்டுமொத்த தூய்மையை உறுதிசெய்யும் பொருட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

இதில், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், இதர பிற அமைப்புகள் கலந்துகொள்ளலாம்.

கிராம சபையில் தீர்மானம்

2-ம் கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு குடிநீர், சுகாதாரம் மற்றும் திட, திரவ மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடைபெறும்.

3-ம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று மகளிர் சுகாதாரக்குழு, சுகாதார இயக்குனர் மற்றும் உறுப்பினர்கள் தனிநபர் கழிப்பறை உபயோகித்தல், பயன்பாடு, குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு, குடிநீர் தரம் பரிசோதித்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடைபெறும்.

4-ம் கட்டமாக ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், நெகிழி பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

5-ம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் உள்ள புறம்போக்கு இடத்தில் மரக்கன்று நடுதல், பள்ளிகள், அங்கன்வாடிகளில் தோட்டம் அமைத்தல், வீடுகளில் ஊட்டசத்துமிக்க காய்கறி தோட்டம் அமைத்தல் போன்ற விழிப்புணர்வு தொடர்பான பிரசாரத்தை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு மேற்கொள்ளப்படும்.

வருகிற 2-ந்தேதி ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறும் கிராம சபையில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.

எனவே பல்வேறு கட்டங்களாக நடக்கும் பிரசார இயக்கத்தில் பொதுமக்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் இதர அமைப்புகள் கலந்துகொண்டு தங்களின் பங்களிப்பை வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story