லஞ்சம் வாங்கியது குறித்து தனிக்குழு விசாரணை
தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் லஞ்சம் வாங்கியது குறித்து தனிக்குழு விசாரணை நடத்த மருத்துவக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
தனிக்குழு விசாரணை
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றிவர் டாக்டர் மீனாட்சிசுந்தரம். இவர் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கேண்டீன்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக, கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மீனாட்சிசுந்தரம் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.
இந்தநிலையில் மீனாட்சிசுந்தரம் லஞ்சம் வாங்கிய விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் மருத்துவக்கல்வி இயக்குனரகம் சார்பில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழு இன்னும் ஓரிரு நாட்களில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து விசாரணை தொடங்க உள்ளது.
31-ந்தேதி பணி ஓய்வு
தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக பணியாற்றிய மீனாட்சிசுந்தரம் ஏற்கனவே மருத்துவக்கல்வி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணியாற்று வந்தார். மேலும் அவர் வருகிற 31-ந்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் பணிஓய்வு பெற 30 நாட்களே உள்ள நிலையில் அவர் லஞ்ச புகாரில் சிக்கி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.