இறால் பண்ணை அத்துமீறல்களை தடுக்க சிறப்பு குழு -கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
இறால் பண்ணை அத்துமீறல்களை தடுக்க சிறப்பு குழு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சித்தேரி நீர்நிலைக்கு அருகிலும், பழவேற்காடு ஏரிக்கு அருகிலும் உள்ள திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் கிராமத்தில் உள்ள சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த பண்ணைகள் பதிவு செய்யப்படாமல் இருந்ததையொட்டி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடலோர மீன்வளர்ப்பு ஆணைய சட்டத்தை மீறியவர்கள் மீது வழக்கு தொடுக்கவும், கடந்த கால விதிமீறல்களுக்கான இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடவும் கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
ஆனால், இதேபோன்று தமிழகத்தில் ராமேசுவரம், பிச்சாவரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மிகப்பெரும்பாலானவை சட்டவிரோதமாக செயல்படுகின்றன. அனுமதி ஆணையின்றி பல இறால் பண்ணைகளை நடத்துவது ராமேசுவரம் பகுதியில் இயல்பாக இருக்கிறது.
எனவே, தமிழ்நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகள் குறித்து உண்மையான விவரங்களை அறியவும், அத்துமீறல்களை தடுத்து நிறுத்தவும், சட்டவிரோத இறால் பண்ணைகளை மூடவும் சட்டப்படியான இறால் பண்ணைகளாக இருந்தாலும் அவை சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், இதற்கென அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அக்கறை கொண்ட ஒரு குழுவை அமைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.