கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்


கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
x

கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருச்சி

நவராத்திரி விழா

திருச்சி மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. இதில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவத்தின் முதல் நாளான நேற்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து 8.45 மணி வரை நடைபெற்றது.

இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று மாலை அம்மன் ஏகாந்த அலங்காரத்தில் 2-ம் பிரகாரத்தில் வலம் வந்து, கண்ணாடிசேவை கண்டருளி, கொலு மண்டபத்தில் எழுந்தருளுளினார்.

சமயபுரம் அம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அம்மன் புவனேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) திரிமூர்த்தி அலங்காரத்தில் அம்மன் காட்சியளிக்கிறார். விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நேற்று தாயார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு நவராத்திரி கொலு மண்டபம் வந்தடைந்தார். மண்டபத்தில் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 30-ந்தேதி தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது.

வெக்காளியம்மன் கோவில்

திருச்சி உக்கிரமாகாளியம்மன் கோவிலில் நேற்று அம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்சவர் கிளி வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு உலா வந்தார். இதைத்தொடர்ந்து தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருகிற 5-ந்தேதி இரவு அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வெற்றி விநாயகர் கோவில்

இதேபோல் திருச்சி கருமண்டபம் வசந்தநகர் ஜெயநகரில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. இதில் நேற்று உற்சவர் அம்மனுக்கு அகிலாண்டேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. மேலும் பிரகார உலா நடந்தது. மேலும் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.


Next Story