நடராஜருக்கு சிறப்பு அலங்காரம்
உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
எஸ்.புதூர்,
உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
ஆனி திருமஞ்சனம்
சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மட்டுமே அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறும். அதில் 2 முறை காலையிலும், மீதி 4 முறை மாலையிலும் நடைபெறும். காலையில் நடைபெறும் விழாக்களில் மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனம் சிறப்பானதாகும்.
. அதன்படி இந்த ஆண்டு ஆனி உத்திர நட்சத்திரமான நேற்று சிவாலயங்களில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. முன்னதாக நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பால், இளநீர், அரிசி மாவு, பழங்கள், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து 16 வகையான தீபாராதனைகள் நடைபெற்றது.
கூட்டு வழிபாடு
உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் நடைபெற்ற விழாவில் தமிழில் 1008 போற்றி பாராயண கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதே போல மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில், திருப்புவனம் சிவன் கோவில், காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் உள்பட பல சிவன் கோவில்களில் உள்ள நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூைஜகள் நடைபெற்றன.