திருஉத்திரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அலங்காரம்


திருஉத்திரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அலங்காரம்
x

ஆனி திருமஞ்சனத்தையொட்டி ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்திரகோசமங்கை கோவில் நடராஜருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்

ஆனி திருமஞ்சனத்தையொட்டி ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்திரகோசமங்கை கோவில் நடராஜருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமேசுவரம் கோவில்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ருத்ராட்சை மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நேற்று ஆனி திருமஞ்சனம் என்பதால் ராேமசுவரம் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜர், சிவகாமி அம்மனை தரிசனம் செய்தனர்.

திருஉத்திரகோசமங்கை கோவில்

திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் ஒரே கல்லினால் ஆன ஆடும் திருக்கோலத்தில் பச்சை மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் பாதுகாப்பு கருதி ஆண்டு முழுவதும் சந்தனம்பூசப்பட்டு ஆருத்ரா தரிசனத்தன்று பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்படும். இதுதவிர, ஆனி மாதத்தில் திருமஞ்சன திருவிழாவின்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

பொதுவாக திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுது ஆகும். இவ்வாறு தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப்பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவுப்பொழுது ஆவணி மாதமாகவும், அர்த்த சாமம் புரட்டாசி மாதம் என்றும் ஒவ்வொரு மாதங்களும் ஒவ்வொரு சிறப்பை பெற்றுள்ளன. அந்தவகையில் சந்தியா காலங்களாக விளங்கும் மார்கழியும், ஆனி மாதமும் தான் இறைவழிபாட்டிற்கு உகந்த மாதங்களாக கருதப்பட்டு வருகிறது. நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு 6 முறை விசேஷ அபிஷேக தினங்களாக கருதப்பட்டாலும், ஆனியும், மார்கழியும் சிறப்பு விசேஷ தினங்களாக கருதப்படுகிறது.

ஆனி திருமஞ்சனம்

இதன்படி திருஉத்தரகோசமங்கை கோவிலில் எழுந்தருளியுள்ள மரகத நடராஜருக்கு மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் சிறப்புக்குரிய நாட்களாக உள்ளன. ஆனி திருமஞ்சன தினமான நேற்று திருஉத்திரகோசமங்கை கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் சன்னதி முன்புறம் அமைந்துள்ள உற்சவ நடராஜருக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு பால், இளநீர், மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான மூலிகைகளை கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. உற்சவ நடராஜர் சந்தனகாப்பு அலங்காரத்தில் தாழம்பூ, வில்வமாலைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன்பின்னர் நமசிவாய மந்திரங்கள் முழங்க உற்சவ மூர்த்தி வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன், செயல்அலுவலர் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story