தனிப்படை போலீசார் திருச்சி, மதுரைக்கு விரைந்தனர்


தனிப்படை போலீசார் திருச்சி, மதுரைக்கு விரைந்தனர்
x

நீலகிரி கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக, மர்ம நபரை கைது செய்ய தனிப்படை போலீசார் திருச்சி, மதுரைக்கு விரைந்து உள்ளனர். மேலும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக, மர்ம நபரை கைது செய்ய தனிப்படை போலீசார் திருச்சி, மதுரைக்கு விரைந்து உள்ளனர். மேலும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

நீலகிரி மாவட்ட கலெக்டராக அம்ரித் கடந்த 25.11.2021-ந் தேதி முதல் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மர்ம நபர் ஒருவர் கலெக்டரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினார். அதில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து உள்ளார். தொடர்ந்து கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

உடனடியாக மாவட்ட முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் விடிய, விடிய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர சோதனை

ஊட்டி நகர பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். கல்லட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட சாலைகளில் வாகன சோதனை நடந்தது.

இதேபோல் மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் விசாரணை நடத்திய பின்னரே வாகன ஓட்டிகள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஊட்டி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த வெளியூர்களில் இருந்து வந்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதேபோல் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை விரைந்தது

கலெக்டர் செல்போனுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த எண்ணை வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக மிரட்டல் விடுத்தார் என்று சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் திருச்சிக்கும், ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் மதுரைக்கும் விரைந்து உள்ளனர்.

மேலும் நீலகிரியில் உள்ள 12 அணைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story