மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. உதவி கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து அவரவருக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று, தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கூட்டம் நடக்க உள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளை தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகிய நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் 2 ஆகியவற்றுடன் மனுக்களாக உதவி கலெக்டரிடம் வழங்கலாம்.
பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு விதிகளுக்குட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உடனடி தீர்வு காண வழி வகை செய்யப்படும். இவ்வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.