மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக அடையாள அட்டை வழங்கும் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முகாமில் 192 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. 168 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பதிவு, 127 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு, 154 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் செயற்கை கால் வேண்டி 4 நபர்களும், அறிவு சார் குறைபாடு உடையவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவி தொகை வேண்டி 13 நபர்களும், வங்கி கடன் வேண்டி 7 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 11 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 9 நபர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
நிகழ்ச்சியின்போது மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மோட்டார் பொருந்திய தையல் எந்திரத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ''வேறு எந்த மாவட்டத்திலும் இது போன்று ஒவ்வொரு வாரமும் முகாம்கள் நடத்தப்படுவதில்லை. இதனை ஏற்பாடு செய்து நடத்தி வரும் கலெக்டரை பாராட்டுகிறேன்'' என்றார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலக பணியாளர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.