குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: டி.ஜி.பி., போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு பாராட்டு


குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: டி.ஜி.பி., போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு பாராட்டு
x

டிஜிட்டல் ஆதார ஆவணங்கள் குறித்து வழிகாட்டு முறைகளை உருவாக்க நடவடிக்கை எடுத்ததற்கும், கொடூர குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைத்ததற்கும் தமிழ்நாடு டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் பல வழக்குகளில் பணிச்சுமையின் காரணமாக போலீசாரால் முழு கவனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், கொடூர குற்ற வழக்குகளில் சமூக வலைதளங்களில் வரும் வீடியோ காட்சிகளையும் சாட்சி ஆவணங்களாக பயன்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல் இருந்தது.

இதையடுத்து, ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம், தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு, பிறப்பித்த உத்தரவில், "கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடூர குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். இந்த சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விரைவாக, திறமையாக விசாரித்து, குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்து, கொடூர குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், டிஜிட்டல் சாட்சி ஆவணங்களை எப்படி குற்ற வழக்குகளில் கையாளுவது என்பது குறித்து விதிமுறைகள் உருவாக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

டி.ஜி.பி. அறிக்கை

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா, டி.ஜி.பி.யின் அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

இந்த ஐகோர்ட்டு உத்தரவின்படி, சென்னை மாநகரில் உள்ள 12 போலீஸ் மாவட்டங்களில் ஒரு போலீஸ் நிலையம் என்று 12 போலீஸ் நிலையங்களை சிறப்பு புலனாய்வு குழுவாக அறிவித்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். டிஜிட்டல் ஆதார ஆவணங்களின் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு டி.ஜி.பி., அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

டிஜிட்டல் ஆதாரம்

இந்த குழு, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகள் டிஜிட்டல் ஆதாரங்களை எப்படி கையாளுகின்றன என்பதை ஆய்வு செய்து வருகிறது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில், டிஜிட்டல் ஆதாரங்களை கையாளுவது குறித்து இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த வழிகாட்டு உத்தரவுகளையும் இந்த குழு ஆய்வு செய்து, அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதவிர சமூக வலைதளங்களில் வரும் வீடியோ காட்சிகளை எவ்வாறு ஆதாரமாக எடுத்துக் கொள்வது என்பது குறித்தும் அந்த துறையில் உள்ள நிபுணர்களின் கருத்துக்களை பெறப்படுகிறது.

தமிழில் கையேடு

டிஜிட்டல் ஆதார ஆவண கையேடு புலனாய்வுத்துறையில் உயர் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர் வரை அனைவரும் எளிதாக புரிந்துக் கொள்ளும் விதமாக ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுகிறது. இதை போலீஸ் பயிற்சி மையங்களிலும் பாடமாக நடத்தப்படும். எனவே, டி.ஜி.பி.யின் அறிக்கையை ஏற்று, இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், சிறப்பு புலனாய்வு குழுவாக அறிவிக்கப்பட்ட 12 போலீஸ் நிலையங்களில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை பாதுகாப்பு போன்ற பிற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். விசாரணையை செப்டம்பர் 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story