சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்


சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 15-ந் தேதி முதல் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 15-ந் தேதி முதல் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.

கடன் உதவி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்த சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் டாம்கோ கடன் திட்டம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு கடன், கல்வி கடன், கறவை மாடு வாங்க, ஆட்டோ வாங்க கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராம புறமாயின் ரூ.98 ஆயிரம், நகர்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருத்தல் வேண்டும். இத்திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.

ஆண்டு வருமானம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பொதுகால கடன் திட்டம், சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக உள்ள பெண்கள், ஆண்களுக்கு சிறு கடன், கறவை மாடு கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர் பாசன வசதிகள் அமைக்க மானியத்துடன் கூடிய கடன் ஆகிய கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

தாலுகா அலுவலகங்களில்

சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்), வங்கிகள் கூறும் தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இதற்கான சிறப்பு முகாம்கள் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. அதன்படி 15-ந் தேதி வாலாஜாவிலும், 16-ந் தேதி அரக்கோணத்திலும், 20-ந் தேதி நெமிலியிலும், 21-ந் தேதி சோளிங்கரிலும், 22-ந் தேதி ஆற்காட்டிலும், 23-ந் தேதி கலவையிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. கடனுதவி பெற விரும்புவோர் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story