சிறப்பு கடன் உதவி முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு கடன் உதவி முகாம் நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதேபோன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பொதுகால கடன் திட்டம், சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கான சிறுகடன் வழங்கும் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா), சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆண்களுக்கான சிறுகடன் திட்டம், கறவை மாட்டுக்கடன், சிறு குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம் ஆகிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
இந்த இரு திட்டங்களுக்கான கடன் வழங்கும்சிறப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடக்கிறது. திருப்பத்தூரில் 14-ந் தேதியும், நாட்றம்பள்ளியில் 16-ந் தேதியும், வாணியம்பாடியில் 21-ந் தேதியும், ஆம்பூரில் 23-ந் தேதியும் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடக்கிறது.
சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.