வேலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் சிறப்பு கடன்மேளா
வேலூர் மாவட்டத்தில் டாம்கோ, டாப்செட்கோ சார்பில் 6 இடங்களில் சிறப்பு கடன்மேளா நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு கடன்மேளா
வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் டாம்கோ, டாப்செட்கோ சிறப்பு கடன்மேளா நடக்கிறது.
இந்த கடன்மேளா வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மூலமாக நாளை (செவ்வாய்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வேலூர், அணைக்கட்டு தாலுகா அலுவலகங்களில் நாளையும், காட்பாடி, கே.வி.குப்பம் தாலுகா அலுவலகங்களில் நாளை மறுதினமும், பேரணாம்பட்டு, குடியாத்தம் தாலுகா அலுவலகங்களில் வருகிற 9-ந் தேதியும் நடக்கிறது.
குடும்பத்தில் ஒருவருக்கு கடனுதவி
இது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சியர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில் செய்வதற்கான கடன் உதவி திட்டமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், 60 வயதுக்கு உட்பட்டவர்களும் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
ரூ.20 லட்சம் கடன்தொகை
அதிகபட்சமாக ரூ.20 லட்சம் கடன்தொகை ஆண்டுக்கு 5 சதவீத வட்டியுடன் வழங்கப்படும். கடன்தொகையை 3 முதல் 5 ஆண்டிற்குள் திருப்பி செலுத்தும் வசதி உள்ளது. அடமான சொத்து கிரைய பத்திரம், மூலப்பத்திரம், சொத்து மதிப்பு, வில்லங்க சான்று உள்ளிட்ட ஆவணங்கள், சாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு கடன் மேளாவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்கள், சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து கடன்பெற்று பயனடையலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.