வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
வேளாங்கண்ணி பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. கீழை நாடுகளின் 'லூர்து' நகர் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.'பசிலிக்கா' என்ற பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று. பேராலயத்தின் அருகிலேயே வங்கக்கடல் அமைந்துள்ளது இந்த பேராலயத்துக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்
பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
மின் விளக்கு பந்தல்
இதை முன்னிட்டு விண்மீன் ஆலயம் அருகில் சேவியர் திடலில் மாநாட்டு பந்தலில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் செல்லும் சாலையில் 460 அடி நீளத்தில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.நுழைவுவாயில் வளைவு, கீழ் கோவிலுக்கு செல்லக்கூடிய பாதை, விண்மீன் ஆலயத்துக்கு செல்லக்கூடிய பாதை மற்றும் ஆலயத்தை சுற்றி வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பேராலய வளாகம் முழுவதும் வண்ணமயமாக ஜொலித்தது.ஏசு பிறப்பு நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்து இருந்தனர்.
ஏசு பிறப்பு நிகழ்ச்சி
நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது. இதில் கிருபா ஆசீர்வாதம் மறையுரை தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஆகிய மொழிகளில் ஜெபம் உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் விண்மீன் ஆலயத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டு பந்தலில் இருந்து குழந்தை ஏசுவின் சொரூபம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மேடையில் இருந்த பங்குத்தந்தை அற்புதராஜிடம் வழங்கப்பட்டது. அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசு சொரூபத்ைத வைத்து ஏசு பிறப்பை அனைவருக்கும் அறிவித்தார்.
போலீஸ் பாதுகாப்பு
அதனை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்து தரிசனம் செய்தனர். விழாவில் பேராலய அதிபர் இருதயராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள், அருள் சகோதரிகள், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. விழாவையொட்டி மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.