தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு திருப்பலி
விருதுநகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குருத்தோலை பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குருத்தோலை பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் விருதுநகர் மறைவட்ட அதிபரும், ஆலய பங்குத்தந்தையுமான அருள்ராயன் அடிகளார், துணை பங்குத்தந்தை சகாய பிரிட்டோ அடிகளார் தலைமையில் கிறிஸ்தவர்கள் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளை கரங்களில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் ஜெபங்கள் செய்தும், கிறிஸ்து வருகை பாடல்களை பாடிக் கொண்டும் சென்றனர். குருத்தோலை பவனி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகம், ரெயில்வே மேம்பாலம், அருப்புக்கோட்டை சாலை, எம்.ஜி.ஆர். சிலை வழியாக சென்று ஆலயத்தினை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது. விருதுநகர் பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் மதுரை உயர் மறை மாவட்ட பொருளாளர் அல்வரஸ் செபாஸ்டின் அடிகளார், பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார், துணைப்பங்குதந்தை மார்ட்டின் குமார் அடிகளார், எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் ஆரோக்கியம் அடிகளார் ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவர்கள் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளை கரங்களில் ஏந்தியவாறு ஊர்வலமான சென்றனர்.
சிறப்பு திருப்பலி
அண்ணா நகர் தூய அந்தோணியார் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம் வழியாக ஆலயத்தினை மீண்டும் ஊர்வலம் வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. இதே போன்று விருதுநகர் நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணிசாமி தலைமையில் குருத்தோலைகளை கரங்களில் ஏந்தியவாறு ஆலயத்தை சுற்றி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து சிறப்பு சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. ஆர்.ஆர்.நகரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பீட்டர்ராய் அடிகளார், துணை பங்குதந்தை அருள்தாஸ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்று பின் சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் குழந்தை ஏசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி, சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது.