சிறப்பு மருத்துவ முகாம்
சிங்கம்பாறையில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முக்கூடல்:
சிங்கம்பாறை புனித பவுல் மேல்நிலைப்பள்ளியில் பாப்பாக்குடி வட்டாரம் முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையம், மைலப்புரம் துணை சுகாதார நிலையம் ஆகியன இணைந்து தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியது. வட்டார மருத்துவ அலுவலர் அஷ்ரப் அலி வரவேற்றார். நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ராஜேந்திரன் தலைமையில் சிங்கம்பாறை பங்குத்தந்தை அருள் நேசமணி வாழ்த்துரை வழங்கினார். முக்கூடல் பேரூராட்சி துணை தலைவர் லெட்சுமணன் முன்னிலையில், தலைவர் ராதா குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, காசநோய் கண்காட்சி, சத்துணவு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, ஈ.சி.ஜி. பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனைகள் செய்யப்பட்டது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பொது மருத்துவம், தோல் மருத்துவம், குழந்தை மருத்துவம், மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவ சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டனர். முகாமில் 1152 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.